சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பு ’கில்நெட்’ மற்றும் ’லாங்லைன் டூனா’ விசைப்படகு உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.வரதன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், ” தொடர் சீற்றம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் மே 31 வரை 45 நாட்கள் என தடைக்காலம் நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் ஜூன் 15 வரை என 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.
மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மத்திய மாநில அரசுகள், மீன்பிடி தடைக்காலத்தை நிர்ணயித்துள்ளன். அந்த 61 நாட்களில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள் ஏதுமில்லை என மத்திய அரசிடம் வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதனடிப்படையில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 15 வரை என்ற மீன்பிடி தடைக்காலம் தொடர்பான உத்தரவை ரத்து செய்துவிட்டு, வங்கக்கடல் சீற்றம் மிகுந்து காணப்படும் அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடித் தடைக்காலமாக அறிவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் “ எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகளின் மீன்வளத்துறை, இந்திய மீன்வள ஆய்வுத்துறை, மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிங்க: புரெவி புயல் தாக்கம்: இடிந்துவிழுந்த தனுஷ்கோடி தேவாலய சுற்றுச்சுவர்