சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வயதான மூதாட்டிகளிடம் தொடர்ந்து நகைகளை பறித்துச் செல்வதாக காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், அந்த குற்றவாளியை பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வயதான ஒருவர் மூதாட்டியிடம் கொள்ளை அடிக்க முயன்ற போது காவல் துறையினர் வயதானவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் விசாரணையில், அந்த வயதான கொள்ளையன் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (வயது 78) என்பது தெரிய வந்தது. இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. மேலும் செங்குன்றம் பகுதியில் கடந்த 40 வருடமாக ரோட்டில் துணி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இதே போல் வாரத்தில் நான்கு நாட்கள் துணி விற்பதும், மீதி மூன்று நாட்களில் மருத்துவமனைக்கு தனியாக வரும் வயதான மூதாட்டிகளை குறிவைத்து நூதன முறையில் கொள்ளையடிக்கும் வழக்கத்தை அவன் வாடிக்கையாக வைத்துள்ளது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் முதியோர் உதவி தொகை, வங்கியில் கடன் பெற்று தருவதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றி கொண்டு அவர்களிடம் உள்ள நகையை பறித்து கொண்டு ஏமாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, பெரியமேடு போலீசார் அந்த நூதன கொள்ளையனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.