சென்னையிலுள்ள ராயப்பேட்டை பொன்னுசாமி தெருவைச் சேர்ந்தவர் செல்வி(40). இவருக்கு திருமணம் ஆகாத காரணத்தால் தனது தந்தை சரவணனுடன்(70) வசித்து வருகிறார். செல்வி அவரது தந்தை உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருப்பதால் அவரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இதனை வெகுநாட்களாக நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், பட்டப்பகலில் செல்வியின் வீட்டுக்குள் நுழைந்து செல்வியிடம் விலாசம் விசாரிப்பது போல் அருகில் சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை செல்வியின் கழுத்தில் வைத்து வீட்டிலுள்ள நகை, பணத்தை தருமாறு மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்த செல்வி, தான் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகையையும், விரலில் இருந்த மோதிரத்தையும் கழட்டி கொடுத்துள்ளார். இதனையடுத்து, கொள்ளையர் நொடிப்பொழுதில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
ஆனால், செல்வி செய்வதறியாது அதே இடத்தில் மயக்கம் அடைந்து கிழே விழுந்துவிட்டார். பின்னர் இதுகுறித்து செல்வியின் குடும்பத்தினர் ராயப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, செல்வி வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தப்பியோடிய கொள்ளையர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.