சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழர் நாகரிகம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது.
இதையடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஐந்து கட்ட அகழாய்வுப் பணிகள் அங்கு நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருள்கள் மதுரை தமிழ்ச்சங்கத்தில் விரைவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுப் பகுதிகளைக் காண பொதுமக்கள், மாணவ மாணவியர் தினமும் அங்கு வருவதால் கீழடி சுற்றுலாத் தலமாக மாறிவருகிறது.
இந்நிலையில் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுகளை நடத்த அனுமதிக்கக்கோரி தமிழ்நாடு தொல்லியல் துறை மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதேபோன்று, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட பல இடங்களிலும் அகழாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் விண்ணப்பித்திருந்தது.
இதையடுத்து மத்திய தொல்லியல் துறை ஆலோசகர் நிலைக்குழு, தமிழ்நாட்டின் கோரிக்கையை பரிசீலித்து தற்போது அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையருக்கு மத்திய தொல்லியல் துறை எழுதியுள்ள கடிதத்தில், 2020ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இந்த அகழாய்வுப் பணிகள் குறித்து சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்து அகழாய்வு முடிவு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.