சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. இதனால், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலர் திருப்புகழ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மத்தியக் குழுவினர் நேற்று (ஏப்ரல் 25) சென்னை வந்தனர்.
அதன்பின், சென்னை மாநகராட்சி அலுவலர்களிடம் மத்தியக் குழுவினர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதையடுத்து முதல் நாளான நேற்று, தேனாம்பேட்டை மண்டலம், ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி தலைமையில் உள்ள சமூக நலக் கூடம், ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோய் தொற்று குறித்த தொலைபேசி ஆலோசனை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வணிகர்களை நேரடியாக சந்தித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கை குறித்து வணிகர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், அம்மா உணவகத்தை ஆய்வு செய்த குழுவினர், உணவின் தரம், சுவை பற்றி மக்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் அனிதா கோக்கர், சூரிய பிரகாஷ், லோகேந்திர சிங், விஜயன், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மண்டல சிறப்புக் குழு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.