சென்னை: பார்க் டவுன் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (70). இவர் நேற்று (செப்.05) திருவான்மியூரில் இருந்து ஏ1 பேருந்து மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாமோதரன் இறங்கும்போது மற்றொரு பயணி ஒருவர் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.
தாமோதரன் திருடன் என சத்தம் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் செல்ஃபோனை பறித்து ஓடிய நபரை துரத்திச் சென்றனர். அப்போது அந்த வழியாக பணி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை பெண் காவலரான இந்திராணி, திருடனை விரட்டி பிடித்து பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பிடிப்பட்ட நபரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த பாலாஜி (28) என்பதும் இவர் மீது ஏற்கனவே ஆவடி, சி.எம்.பி.டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பயணிகளிடம் பணம், செல்போன் திருடிய பெண் கைது