தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பல்வேறு தேர்வு வழிகாட்டுதல் நடைமுறைகளை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், அரசுத் பொதுத்தேர்வினை நடத்துவதில் முழுப்பொறுப்பும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களையே சேரும். அதனடிப்படையில் அவர்களுக்கான பணிகளையும், பொறுப்பு மற்றும் கடமைகளையும் கூறியுள்ளது.
முழுப்பொறுப்பு- அறிவுரை
அந்த வழிகாட்டல் அறிக்கையில், “அரசுப் பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் நடத்திடும் முழுப்பொறுப்பும் மாவட்ட ஆய்வு அலுவலர்களையே (முதன்மைக் கல்வி அலுவலர்கள் ,மாவட்டக் கல்வி அலுவலர்கள்) சாரும்.
ஆய்வு அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உரிய தேர்வுக்கால அட்டவணைகளை பள்ளிகளின் அறிவிப்புபலகையிலும் , சம்பந்தப்பட்ட வகுப்பறைகளிலும் ஒட்டுவதற்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்.
கட்டுக்காப்பு மையம்
இதுமட்டுமின்றி வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலும் தேர்வுக்கால அட்டவணைகள் ஒட்டப்பட்டிருத்தல் வேண்டும். தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, உரிய பாதுகாப்புடன் இருக்கிறதா? என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வினாத்தாள் சிப்பங்கள் வைக்கப்படும், அறையானது முழுவதும் மூடப்பட்ட நிலையிலும், ஜன்னல்கள் ஏதுமின்றியும் இருத்தல் வேண்டும். ஜன்னல்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட்டு செங்கல் மற்றும்சிமெண்ட் கொண்டு அடைக்கப்படுதல் வேண்டும்.
கண்காணிப்பு கேமரா
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் போதுமான எண்ணிக்கையில் இரட்டை பூட்டுஅமைப்பு கொண்ட இரும்பு அலமாரிகள் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து, அவ்வாறு இல்லையெனில் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையமாக உள்ள பள்ளி, தேர்வு மையமாகவும் இருப்பின் தேர்வு மையத்திற்குத் தனிகாவலர் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
ரகசிய அறை
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பகுதி வாரியாக அமைக்கப்பட வேண்டும். வினாத்தாள் சிப்பங்கள் பிரிக்கப்படாமல் தேதி, பாடம் மற்றும் மையம் வாரியாக ரகசிய அறையில் அலமாரிகளில் அடுக்கப்பட்டு உரிய பதிவேடுகள் எழுதப்பட்டு வருகிறதா? என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாட்களில் ஆய்வு அலுவலர்களின் முதல் பணி, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களைப் பார்வையிட்டு, உரிய நேரத்தில் உரிய பாடத்தேர்விற்கான வினாத்தாள் சிப்பங்கள், சார்ந்த வழித்தட அலுவலர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதா? என்பதனை விநியோக நேரத்தில் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.