சென்னையில் உள்ள ஐஐடியில் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த நவம்பர் 9ஆம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மாணவி ஃபாத்திமா, தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மூன்று பேராசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களால் தான் தற்கொலை செய்துகொள்வதாக தனது செல்போனில் குறிப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், இது குறித்த விசாரணையை நடத்தினர். மேலும், மாணவியின் செல்போன் குறிப்பு தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது தடயவியல் துறை சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில், செல்போனில் உள்ள தற்கொலை குறிப்பு பொய்யானது அல்ல என குறிப்பிட்டுள்ளதாக, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
மேலும் மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கின் விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஐஐடி மாணவர்களின் தொடர் தற்கொலை சம்பவங்கள் குறித்தும், மாணவி ஃபாத்திமா லத்தீப் வழக்கையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி இந்திய மாணவர் சங்கமும், கேரளாவைச் சேர்ந்த முகமது சலீம் உட்பட சமூக ஆர்வலரும் பொதுநல மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது சிபிஐயில் பணியாற்றிய இருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை குழுவில் உள்ளனர். மேலும் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற இயலாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
16 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு: ஒடிசாவில் அரங்கேறிய கூட்டு பாலியல் வன்முறை!