சென்னை: கொடைக்கானலை சேர்ந்த எஸ்.மனோஜ் இமானுவேல் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழக வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் உயிர் இழந்து வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 'என தெரிவித்திருந்தார்.
வனப்பகுதியில் வாழும் யானைகள் தந்தங்களுக்காக கொலை செய்யப்படுகின்றன. இதுபோன்ற செயல்களால் யானை இனமே அழியும் அபாயம் உள்ளது. எனவே, தந்தங்களுக்காக யானைகள் கொலை செய்யப்படுவது குறித்து தேசிய வன விலங்கு குற்றத்தடுப்பு பிரிவு அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக தொடங்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரணை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பாக சிபிஐ அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த நவம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பகுதியில் ரங்கராஜன் என்பவர் தோட்டத்தில் , யானை ஒன்று மின்சார வேலியில் சிக்கி பலியான விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ரங்கராஜன் விவசாய நிலத்தில் அதிக மின்சாரம் பாயும் மின் வேலியை வைத்ததன் அடிப்படையில் யானை உயிரிழந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதேபோல, 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்,சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் பங்கனஹள்ளி என்ற இடத்தில், ஆண் யானை பலியாகி கிடந்தது. அதன் உடலிலிருந்து இடதுபுறத் தந்தம் திருடப்பட்டதும், வல புறத்திலுள்ள தந்தம் பாதியாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததையும் தெரியவந்தது. தந்தத்திற்காக யானையை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த வழக்கையும் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் யானைகள் வேட்டையாடும் விவகாரம் தொடர்பாக சிபிஐ 8 வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்றம் சிபிஐயின் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து 2014 முதல் 2018 வரை 19 யானைகள் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. யானை தந்தங்களில் கலைப்பொருட்களை உருவாக்கி பெரும் பணக்காரர்களுக்கும், சென்னையில் பெரும் தொழில் அதிபர்களுக்கும் விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தந்தம் வாங்குவதாக தந்திரம் செய்த காவல்துறையினர் - கையும் களவுமாக பிடிபட்ட கடத்தல்காரர்கள்