சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் இன்றளவும் ஓயாமல் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு நடைபெற்றது.
அப்பொழுது ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குச்சென்றபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அதிமுக தலைமைக்கழகம் சூறையாடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ராயப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார். மேலும் சிபிசிஐடி வழக்கை தாமதப்படுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவும் கொடுத்துள்ளார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தைக் காப்பாற்றுவதற்காக திமுக அரசு இதுபோன்ற மெத்தனப் போக்கில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டையும் வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று(செப்.7) காலை சிபிசிஐடி அலுவலர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தை முழுமையாகப் பரிசோதனை செய்தும், 360 டிகிரி கோணத்தில் புகைப்படத்தையும் எடுத்துச்சென்றுள்ளனர். ஜூலை 11ஆம் தேதியிலிருந்து இங்கு காவலுக்காக 70க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம்:முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூடுதல் மனு தாக்கல்