சென்னை: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கைதி ராஜசேகர் கடந்த 12ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் உள்பட 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் விசாரணைக்கைதி ராஜசேகர் மரணம் அடைந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத்தொடங்கி உள்ள நிலையில் சம்பவத்தன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசார்களிடம் நேற்று ஒரே நாளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கைதி ராஜசேகரன் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது, அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
எந்த வழக்கிற்காக அழைத்துவரப்பட்டார்? வழக்கு தொடர்பாக காவல் நிலைய பதிவேடு மற்றும் ஆவணங்களில் முறையாக ராஜசேகரன் கைது தொடர்பாக பதிவு செய்யப்பட்டதா? சம்பவத்தன்று காவல் நிலையத்தில் என்ன நடந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கு 30 போலீசார்களிடம் பதில்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கொடுங்கையூர் விசாரணை கைதி மரண வழக்கு: சிபிசிஐடி விசாரணை அலுவலர் நியமனம்!