சென்னை: மாநகராட்சி மண்டலம் 10இல் மாநகராட்சி சார்பில் மாடுபிடிப்பாளராகப் பணிபுரிந்துவருபவர் ஜான் (30). இவர் கோயம்பேடு நூறடி சாலை ஜெய் நகர் பார்க் அருகே சுற்றித் திரிந்துகொண்டிருந்த மாடுகளைப் பிடித்து மாநகராட்சி வண்டியில் ஏற்றியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மாட்டின் உரிமையாளர் பார்த்தசாரதி என்பவர் என்னுடைய மாட்டை ஏன் வாகனத்தில் ஏற்றுகிறீர்கள் என மாநகராட்சி ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை பெருநகரில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் மாடுகளைப் பிடித்துக்கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளார். அபராதத் தொகை கட்டிவிட்டு மாடுகளைத் திரும்ப அழைத்துச் செல்லுமாறும் மாநகராட்சி அலுவலர் கூறியுள்ளார். அப்போது மாநகராட்சி அலுவலரை மிரட்டும் வகையில் பேசிவிட்டு மாட்டினை அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், இது குறித்து ஜான் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பார்த்தசாரதியைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயக்குமார்