புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு துறைகளில் உள்ள நான்கரை லட்சம் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் ஊழியர்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி தலைமைச் செயலகத்திற்கு பேரணியாக சென்றதால் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதையும் மீறி சுமார் 200க்கும் மேற்பட்டோர் காமராஜர் சாலை வழியாக பேரணியாக சென்றதால் போர் நினைவு சின்னம், தலைமை செயலகம் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 700 அரசு ஊழியர்கள் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத கூடுதல், அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” - அரசு ஊழியர்கள் போராட்டம்