சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம்(38). இவர் பஜாஜ் நிறுவனத்தில் மண்டல அலுவலராக பணிபுரிகிறார். ஸ்ரீராம் கடந்த ஒன்றாம் தேதி இரவு தேனாம்பேட்டையில் உள்ள தி பார்க் நட்சத்திர ஹோட்டலில் மது அருந்த சென்றுள்ளார்.
அதிகாலைவரை மது அருந்திய ஸ்ரீராம் பின்னர் காரை எடுப்பதற்காக கார் பார்க்கிங் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா குடிபோதையில் பணம் தீர்ந்துவிட்டது அதனால்4 பீர் வாங்கி வரும்படி ஸ்ரீராமை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு ஸ்ரீராம் மறுப்பு தெரிவிக்கவே உடனே சூர்யா தனது கையில் வைத்திருந்த டார்ச் லைட்டால் அவரை அடிக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனைக் கண்ட ஹோட்டல் காவலாளிகள் ஓடி வந்து சிவா மகன் சூர்யாவிடம் சமாதானம் செய்ய முயன்றனர்.
ஆனால் மது போதையில் இருந்த சூர்யா அவர்களையும் மிரட்டியதால் அச்சமடைந்த ஸ்ரீராம் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ஸ்ரீராம் மற்றும் சூர்யா இருவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த எம்.பி. மகன் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் நிலையத்தில் ஸ்ரீராம் புகார் அளித்தார்.
அதேபோல் ஸ்ரீராம் தன்னிடம் வந்து பீர் பாட்டிலை பிடுங்கி குடித்ததாகவும்,
அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அவர் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் ஸ்ரீராம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூர்யாவும் புகார் அளித்தார்.
இருவரது புகாரையும் பெற்றுக்கொண்ட தேனாம்பேட்டை போலீசார் இருவர் மீதும் பொது இடத்தில் ஆபாசமான வார்த்தைகள் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் புகார் அளித்த இருவரும் சமாதானமாகிவிட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கபட்டது.