சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த புதுப்பேட்டை மீர் அசேக் உசேன் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (63) என்பவர் காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஆபாசங்கள் நிறைந்திருக்கின்றன. சிக்கந்தர், சூர்யா தேவி, ஜி.பி.முத்து போன்றவர்கள் சமுக வலைதளங்கள் மூலமாக பெண்களை இழிவாக கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
ஜி.பி. முத்து போன்றோர் பேசும் ஆபாச வார்த்தைகள் சிறுவர்கள், மாணவர்கள் மத்தியில் பரவி, அவர்களும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் பயன்படுத்தி வருகின்றனர்.
யூ-ட்யூப் சேனலை முடக்க கோரிக்கை
தொடர்ந்து, அவர்கள் சமூக வலைதள பக்கங்களையும் பயன்படுத்தி வருவதால் யூ-ட்யூப், டிக் டாக்கில் வரும் ஆபாச வீடியோக்களை கண்டு பாதிப்படைகின்றனர்.
ஜி.பி. முத்து உள்ளிட்டவர்கள் மீது பல மாவட்டங்களில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இம்முறை காவல் துறையினர் தலையிட்டு, ஆபாச செயல்களை பரப்புவோரின் யூ-ட்யூப் சேனலை முடக்கி, அவர்களை கைது செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஜி.பி.முத்து பங்கேற்பதாக தகவல் வெளியாகியது. அதனை உறுதிபடுத்தும் விதமாக, ஜி.பி.முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிக்பாஸ் வீடு முன்பு அவர் நின்றுகொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டிக் டாக் பிரபலங்களுக்குள் மோதல்: காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்