அயனாவரம், கே.எச்.சாலை பகுதியில் நேற்று (செப்.17) பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக, பாஜக, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் காமேஷ்வரன் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அழைக்கப்பட்டிருந்தார்.
அப்போது, முருகனை வரவேற்பதற்காக பாஜக தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சாலையை மறித்து நின்று கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அலுவலகம் செல்வோர் உள்பட பொதுமக்கள் பலரும் கடும் அவதிக்குள்ளாயினர்.
இதையடுத்து அரசின் உத்தரவை மீறி செயல்பட்டதாக பாஜக மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் காமேஷ்வரன் உள்பட பாஜகவினர் மீது, அயனாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சட்ட விரோதமாகக் கூடுதல், தனி மனித இடைவெளி இன்றி ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் இவர்கள் அனைவரின் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், மோடியின் பிறந்த நாள் விழாவிற்காக குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாகச் சென்று, கரோனா காலத் தடையை மீறியதாக, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்பட 100 பேர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமானப் பயணிகளின் கரோனா மருத்துவச் சான்றிதழ் 4 இடங்களில் சரிபார்ப்பு