சென்னை: சென்னை மாநகராட்சியின் 131வது வார்டுக்கு கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, திமுகவைச் சேர்ந்த தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியம் (தற்போதைய அமைச்சர்கள்) ஆகியோரின் தரப்பினர் கே.கே.நகரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, தேர்தல் அலுவலரிடம் இருந்து முத்திரையை பறித்துச் சென்றதாகவும், அதை தட்டிக்கேட்ட தன்னை துரத்தியதுடன், தனது காரை சேதப்படுத்தி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறி, அதிமுக பிரமுகர் சந்தோஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் கே.கே. நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சென்னை எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக...
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட திமுகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று (அக். 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் முறையான புலன் விசாரணையை நடத்தவில்லை எனவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதேசமயம், மனுக்கள் மேல் மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தாமதப்படுத்தியதாக காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதா என்பது குறித்து சேத மதிப்பீட்டு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் கூறி வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: அருப்புக்கோட்டை தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு