சென்னை அண்ணாசாலையை சேர்ந்த இதயத்துல்லா என்பவர் அடையாறில் இருந்து சான்ட்ரோ கார் ஒன்றை இன்று காலை (ஜூன்) தனது கடைக்கு பழுது பார்ப்பதற்காகக் கொண்டு சென்றுள்ளார். அப்போது, காமராஜர் சாலையிலுள்ள கண்ணகி சிலை அருகே செல்லும்போது திடீரென காரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இதனால், உடனடியாக காரை ஓரமாக நிறுத்தி விட்டு காரில் இருந்து இதயத்துல்லாவும் அவரது நண்பர்களும் வெளியேறினர். அப்போது காரில் தீ மளமளவென பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதனால், காமராஜர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து போலீசார் உதவியுடன் தீ விபத்தில் கருகிய காரை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகம் - ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய தொழிலதிபர்