கரோனா தொற்று பரவலுக்கு காரணமாக இருந்ததாக மூன்றாயிரத்துக்கும் அதிகமாக கடைகள் உள்ள சென்னை கோயம்பேடு காய்கனி சந்தை மாநகராட்சி உத்தரவின் பேரில் மூடப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக, திருமழிசையில் 300க்கும் குறைவான கடைகளுடன் மொத்த காய்கனி விற்பனை மட்டுமே அனுமதிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கும்போது, அங்கு மூலிகை கிருமிநாசினி தெளிபான் இயந்திரத்தை நிறுவி அனைவருக்கும் கிருமிநாசினி தெளித்த பின்னரே, மார்க்கெட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், ‘தற்போதுள்ள சூழ்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என தெரிவித்தார்.
மேலும், கிருமிநாசினி தெளிப்பான் எந்திரம் மூலம் ஒருவரது உடல் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பது உடல்நல கேடு என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால், அந்த முறையை அரசு கை விட்டு விட்டது.
மேலும், டிராபிக் ராமசாமிக்கு இரண்டு வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டு, அதை அவர் இதுவரை செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டினார். அபராதம் விதித்த அந்த விவரத்தையும் மனுவில் குறிப்பிடவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடிசெய்யவேண்டும்’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.