சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இந்து அறநிலையத்துறையின் செயல் அலுவலர் பணிக்கான போட்டி தேர்வை கடந்த (செப்.11) ஆம் தேதி நடத்தியது. 113 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இத்தேர்வில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் பங்கேற்றனர்.
இதில், பதினைந்து கேள்விகளுக்கான விடைகள் தவறாக அளிக்கப்பட்டிருந்தது பின்னர் தெரியவந்தது. இதனால், தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான ஆதாரங்களையும் தேர்வர்கள் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு பயிற்சியாளர் நட்ராஜ் சுப்பிரமணியன் கூறுகையில், தேர்வில் தவறான விடைகள் அளிக்கப்பட்டிருப்பது குறித்த ஆதாரங்களை, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு பல தேர்வர்கள் அனுப்பியுள்ளனர். விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்க 27 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவறான விடைகளுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் எனவும் , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலையிட்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போட்டி தேர்வு பயிற்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: இந்து முன்னணி பிரமுகர் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த விவகாரத்தில் எஸ்டிபிஐ நிர்வாகிகள் கைது