சென்னை: அம்பத்தூ்ரை சேர்ந்தவர் திலீப் திருமண நிகழ்ச்சிகளில் போட்டோ சூட் எடுக்கும் வேலை செய்து வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஐசிஎப் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் போட்டோ சூட் எடுத்து முடித்து விட்டு சாப்பிட சென்றபோது, அவரது நான்கு 4 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள கேமரா திருடு போனது.
இதுகுறித்து திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை பார்த்தபோது 50 வயதுடைய ஒருவர் கேமராவை எடுத்து செல்வது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து சென்னையில் அடையாறு, அம்பத்தூர், ஆவடி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மண்டபங்களில் தொடர்ந்து கேமராக்கள் திருட்டு போவதாக பலர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரே நபர் அனைத்து இடங்களிலும் விலை உயர்ந்த கேமராக்களை திருடி சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி அது ஐசிஎப் பகுதியில் உள்ள வேறு ஒரு தனியார் மண்டபத்தில் மூன்று லட்ச ரூபாய் மதிப்புடைய கேமரா திருடு போனதாக அஸ்வின் என்பவர் புகார் அளித்தார்.
அதன் பின் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சென்னையில் தொடர்ந்து கேமராக்கள் திருட்டு போன சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.
இதனையடுத்து உயர் காவல்துறை அலுவலர்களின் உத்தரவால் ஐசிஎப் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொடர்ந்து விலை உயர்ந்த கேமராக்களை திருடும் நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக தேடி வந்தனர்.
ஒரு கட்டத்தில் ஐசிஎப் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சென்னை வில்லிவாக்கம் பாரதிநகரை சேர்ந்த சம்சுதீன்(51) என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சம்சுதீன் திருமண மண்டபங்களில் ஆள் இல்லாத நேரம் பார்த்து கேமரா மற்றும் லென்ஸ் அதற்கு பயன்படுத்தும் பொருட்களை திருடி செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளது தெரியவந்தது.
மேலும் திருமண மண்டபங்களில் மொய் பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை திருடி வந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 15 லட்சம் மதிப்பிலான 3 கேமராக்கள் மற்றும் 6 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு - மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்