கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் இதில் கால் டாக்சி, வாடகை கார்கள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கட்டுப்பாடுகளுடன் கால் டாக்சிகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால் டாக்சி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சென்னை கிண்டி ஜி.எஸ்.டி சாலை, ஒலிம்பியா தொழில்நுட்ப பூங்கா முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது கையில் பதாகைகளை ஏந்தியவாறு, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களுடன் கால் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை உடனடியாக காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். பெட்ரோல் மற்றும் டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை திரும்பப் பெற வேண்டும், வாகன கடன் தவணை, தகுதிச் சான்று, காப்பீடு, சாலை வரி, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், பர்மீட் புதுப்பித்தல் ஆகியவற்றை ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என ஓட்டுநர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கும்!