சென்னை: தமிழ்நாடு அரசின் நதிநீர் இணைப்பு திட்டங்கள் மீது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் (சிஏஜி) 2018ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையில்,'தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தலாம் என கொள்கை வகுக்கப்பட்டு எட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இதில் இரண்டு திட்டங்களுக்கு 2008-இல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 6 திட்டங்கள் கிடப்பில் உள்ளன.
மீதமுள்ள 6 திட்டங்கள்
- தாமிரபரணி- கருமேனி ஆறு நம்பியாறு இணைப்பு திட்டம்;
- காவிரி- அக்னி ஆறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு இணைப்பு திட்டம்;
- பெண்ணை ஆறு - பாலாறு இணைப்பு திட்டம்;
- வெள்ளாறு - சுவேதா நதி - போனேரி - காவிரி இணைப்பு திட்டம்;
- சோலையாறுப்பட்டி - அக்னி ஆறு இணைப்பு திட்டம்;
- தாமிரபரணி - கடானா - சித்தாறு - உப்போடை - கல்லாறு இணைப்பு திட்டம்
இந்த ஆறு திட்டங்களில், மூன்று திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாகவும், மீதம் உள்ள மூன்று திட்டங்களும் நில ஆய்வு திட்ட வடிவமைப்பு என்ற ஆரம்ப நிலையிலேயே தான் உள்ளதாகவும், இனி வரும் காலங்களில்தான் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்' என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோக்கங்கள் நிறைவேறவில்லை
தமிழ்நாட்டில், 16 மாவட்டங்களுக்கு பயனளிக்கும் நதிநீர் திட்டம் முறையான திட்டமிடலின்றி தாமதமாக நிறைவேற்றப்படுவதால், நீர்வளம் குறைந்த பகுதிகளுக்கு பாசன வசதி வழங்குதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் கடல் நீர் ஊடுருவலைத் தடுப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு!