கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாநில அரசின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் அரசின் நிதி சுமை நீண்ட கால அளவில் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகரிப்பது, மதுபானங்களின் விலையை அதிகரிப்பது, மதுக்கடைகளை ஊடரங்கு காலத்தில் திறப்பது, அரசு ஊழியர்களின் பஞ்சப்படியை (டிஏ) நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மூன்றாவதுகட்ட ஊரடங்கு முடிந்த பின் வரும் 18ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஊரடங்கு முடிந்த பின் பேருந்துகளை எவ்வாறு இயக்கலாம் என போக்குவரத்து துறை செயலாளர் பிரதீப் யாதவ், போக்குவரத்து கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பேருந்துகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளையும் விவரித்துள்ளார்.
இந்நிலையில் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்போது அவற்றின் கட்டணம் உயர்த்தப்படும் என தெரியவந்துள்ளது. நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பேருந்து பயணக் கட்டணத்தை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கட்டண உயர்வு 15 முதல் 20 சதவிகித அளவுக்கு இருக்க வாய்ப்புள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:
அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு இல்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்