சென்னை உயர் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு "கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதுதொடர்பான வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 2005ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் அரசு இதுவரை செயல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பி, தலைமை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர் காணொலி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து இந்த வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகினர். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தலைமைச் செயலரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் மேம்படுத்தும் வகையில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளில் 10 விழுக்காடு பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "சென்னை நகரில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தாழ்தள பேருந்துகளை இயக்க இயலாது" என தெரிவிக்கப்பட்டது. அதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னையில் தற்போது 10 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக உள்ளதாக குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும், 2016 - 17 ஆம் ஆண்டுகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனவும் இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து நீதிபதிகள், "மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு நிதி பற்றாக்குறை என்றால் பொருளாதார நெருக்கடி நிலையை பிறப்பிக்கலாமா?, போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது கட்டாயம் தான். ஆனால் கருணைத் தொகை வழங்குவது கட்டாயமா? கருணைத் தொகை வழங்க கூறியது யார்? என கேள்வி எழுப்பினர்.
மேலும் தலைமைச் செயலரின் அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாததால் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படவில்லை என மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூறப்படுவதால், தரமான சாலைகளை அமைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை" என சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, “மாற்றுத் திறனாளிகளுக்கு பயணம் செய்ய ஏதுவாக தற்போது இயக்கப்படும் 10 பேருந்துகள் போதுமானது அல்ல. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிவரும்” என்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொதுப் போக்குவரத்தில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.