அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் தேமுதிக அறிவித்துள்ளது. விஜயகாந்த் கையொப்பமிட்ட இந்த அறிவிப்பு வெளியானதும், அங்கு கூடியிருந்த தேமுதிக தொண்டர்கள் அனைவரும் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மேலும், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை விஜயகாந்த் எப்போது அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், இவ்வளவு நாள் தங்களை கிள்ளுக்கீரையாக பார்த்த அதிமுகவிற்கு வரும் தேர்தலில் தக்கப்பாடம் புகட்டுவோம் என்றும் அவர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் பேசினர்.
அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை அண்மை நாட்களாகவே நடந்து வந்தது. தேமுதிக தரப்பில் தங்களுக்கு பாமகவை விட அதிக தொகுதிகள் வேண்டும் எனவும் மேலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டிருந்தனர். ஆனால், அதிமுகவோ 15 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். அதனாலேயே அதிமுகவுடனான கூட்டணியை தேமுதிக முறித்துள்ளது.
இதையும் படிங்க: தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்த நன்றியை மறந்து விட்டு சுதீஷ் பேசுகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்