மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம், ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் புதுச்சேரியில் செயல்பட்டுவரும் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியன இணைந்து நேற்று (ஜூன் 9) காணொலி கருத்தரங்கம் நடத்தின.
”கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை: முன் தடுப்பு, தடுப்பூசி, சிகிச்சை, தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு அறிவுரைகள்“ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோது மருத்துவர் குழந்தைசாமி,
"கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. தற்சமயம் கர்ப்பிணிகள், 18 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே இதனைப் போட்டுக்கொள்ள முடியாது. மற்றவர்கள் போட்டுக் கொள்ளலாம்.
அதிலும் பாலூட்டும் தாய்மார்கள்கூட இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். கரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரும்பான்மையோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமே மூன்றாம் அலையின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மிதமான பாதிப்பு நிலை வரை இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
தொற்று ஏற்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவைக் கண்காணிக்க வேண்டும்.
அளவு 94-க்குக் குறைந்தால் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். ஆக்சிஜன் அளவைக் கவனிக்காமல் விட்டுவிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குப் போவது நிலைமையை மோசமாக்கிவிடும்.
இன்னும் சில மாதங்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும்" என்றார்.