சென்னையை அடுத்த புத்தகரம் புருஷோத்தம் நகரைச் சார்ந்தவர் புருஷோத்தமன். இவர், கடை கடையாகச் சென்று ஃபினாயில் விற்கும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி பத்மா. இவர்களின் பிள்ளைகள் அரவிந்தன்(10), அருணாச்சலம் (8) ஆகியோர். அரவிந்தன் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அரவிந்தனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து பெற்றோர் சென்னை, பெரியார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அரவிந்தனுக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர். இந்நிலையில் நேற்று காலை அரவிந்தன் கவலைக்கிடமாக இருந்ததையடுத்து, அவரை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி அரவிந்தன் உயிரிழந்தார். இதேபோல் அரவிந்தனின் இளைய சகோதரன் அருணாசலமும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், புத்தகரம் புருஷோத்தமன் நகரில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஏராளமான பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, அலுவலர்கள் தலையிட்டு சுகாதாரச் சீர்கேட்டைப் போக்கவும், காய்ச்சலால் மக்கள் பலியாவதைத் தடுக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: லெபனான் போராட்டம்: 4 அமைச்சர்கள் பதவி விலகல்!