சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வில், 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பள்ளி மாணவர்கள் எழுதினர். தேர்வின்போது மாணவர்களின் மனஉளைச்சலை போக்கும் விதமாக வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இடையே 3 நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற வேதியியல் தேர்வில் வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, பகுதி 1-இல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதியவர்களுக்கும், பகுதி 2-இல் கேள்வி எண் 29-ஐ எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.