சென்னை, பாரி முனைப் பகுதியில் உள்ள லிங்குச் செட்டித் தெருவில் வழக்கறிஞரும், தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளருமான அஷ்வத்தாமனின் அலுவலகம் உள்ளது. நேற்று (ஜூன்.15) இவரது அலுவலகத்தில் தீப்பற்றி எரிந்த நிலையில், இதற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், அலுவலகத்தில் ரசாயனப் பொருள் ஒன்று கிடப்பதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ வேண்டுமென்றே அஸ்வத்தாமனின் அலுவலகத்தை தீவைத்து எரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறி தமிழ்நாடு பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த கரு. நாகராஜன் கூறியதாவது, ”உயர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் அஷ்வதமன் அலுவலகத்தில் நடந்த தீ விபத்து தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். அவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என காவல் ஆணையர் கூறியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது” என கரு.நாகராஜன் தெரிவித்தார்.