இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதற்கெடுத்தாலும் பாஜகவையும், மத்திய அரசையும் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மோடி கடின உழைப்பால், மக்களின் ஆதரவால் பிரதமராக விளங்குகிறார். உங்களைப்போல் தந்தையின் ஆதரவோடு திணிக்கப்பட்ட தலைவரல்ல.
உலகப் பொது மறையாம் திருக்குறளின் பெருமைகளை, பிரதமர் உலகறியச் செய்து கொண்டிருக்கின்றார். அதை தங்களால் ஜீரணிக்க முடியவில்லை. ராணுவ உடை அணிந்து, திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினால் தமிழர்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா? என்று, மொழியை வைத்து அரசியல் நடத்தும் ஸ்டாலின் கேட்டது கண்டனத்திற்குரியது. திருக்குறள் திமுக வின் குடும்பச் சொத்தல்ல.
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியவர்களை வாய் திறந்து கண்டிக்க ஸ்டாலினுக்கு ஏனோ மனம் வரவில்லை. இந்து மத உணர்வுகளை எப்போதுமே மதிக்காதவர் ஸ்டாலின் என்பது நன்கு தெரிந்த ஒன்று. திருவரங்கம் கோயிலுக்குச் சென்ற ஸ்டாலின், அர்ச்சகர் வைத்த குங்குமத்தை உடனடியாக அழிக்கவில்லையா? இதுவரை ஸ்டாலின் என்றாவது கோயில் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருக்கிறாரா? இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறாரா? இப்போது தேர்தல் நெருங்குகிற காலம் என்பதால் கருணாநிதி, கோயில் குளத்தை சுத்தப்படுத்தினார் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். இந்துக்கள் என்றால் திருடர்கள், ராமர் பாலம் கட்ட ராமர் என்ன என்ஜினியரா என்றெல்லாம் கருணாநிதி பேசியதை யாரும் மறந்துவிடவில்லை.
ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் என்றுமே செயல்பட்டது கிடையாது. மத்திய அரசின் எந்த மக்கள் நல திட்டங்களையாவது இதுவரை அவர் வரவேற்றிருக்கிறாரா? 2014-2019 இல் மட்டும் தமிழ்நாட்டிற்கு 5,20,000 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசை ஒருநாளாவது ஸ்டாலின் பாராட்டி வரவேற்றிருக்கிறாரா? மக்களை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது. மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது“ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மின் கட்டணம் உயர்வு - கருப்புக் கொடி ஏந்தி திமுக ஆர்ப்பாட்டம்