மத்திய முன்னாள் இணையமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.
இதில் ஈடுபட்ட குற்றவாளிகள், முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டுவரும் நபர் என்பது தெரியவருகிறது. தமிழ்நாடு அரசு இதில் உடனடியாகவே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிகழ்வானது தமிழ்நாடு காவல் துறையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் நேரடி யுத்தமாகவே நான் நினைக்கிறேன். கேரளாவில் நேற்று குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் இது நடந்துள்ளது. தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த அலுவலர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும்.
என்.ஆர்.சி. யாருக்கும் எதிரானது அல்ல. அதை தெளிவுபடுத்தும்வகையில் தமிழ்நாடு பாஜக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கூறிவருகிறோம். இதை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் போடுவதெல்லாம் தேவை இல்லாத ஒன்று.
தமிழ்நாடு பாஜகத் தலைவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதை எதிர்கொள்ள மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு தயாராக இருக்க வேண்டும்“ எனக் கூறினார்.
இதையும் படிங்க: உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடும் கொலையாளிகள்: சிசிடிவி