பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு, இந்துக்களால் மட்டுமே பாதுகாப்பு கொடுக்க முடியும். பாகிஸ்தானில் பாதுகாப்பு இருக்காது. ஆனால், சகோதரர்களாகிய நம்மைப் பிரித்தாள எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்கின்றன. மீண்டும் ஒரு பாகிஸ்தான் உருவாக நாம் விடக்கூடாது.
இஸ்லாமிய மக்களுக்கு துணையாக திமுக வரும் என்பதை ஒருபோதும் முஸ்லிம் மக்கள் நம்ப வேண்டாம். திமுக இந்துக்களின் 80 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதற்காக, முஸ்லிம்களைப் பாகிஸ்தானுக்கு துரத்தி அடிப்பார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் வாழக்கூடிய பகுதிகளில் காவலர்களே செல்ல இயலாத நிலை உள்ளது. 2010ஆம் ஆண்டு, கீழக்கரைக்கு நான் ரதயாத்திரை செல்லும்போது அங்கு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.
டெல்லி வன்முறையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் சுமத்தப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
பிணந்தின்னி அரசியல் நடத்தக்கூடிய கட்சிகள் காங்கிரசும் திமுகவும்தான். தேர்தல் நெருங்கிவருகிறது. அதனால் முஸ்லிம் பிணமா? இந்து பிணமா? எஸ்.சி. பிணமா? என்றெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. பிணம் விழுந்தால் போதும்“ என்று கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து, டெல்லியில் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டது கொலீஜியத்தின் முடிவு என்று கூறிய பொன். ராதாகிருஷ்ணன், பாஜகவிற்கு ஒரு மாநிலத்தில்தான் தலைவர் இல்லை, ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றார்.
இதையும் படிங்க: ’மதமும் சாதியும் பயன்படுத்தியவர்களையே பதம் பார்த்துவிடும் என்பதை பாஜக உணர வேண்டும்’