சென்னை: விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் பேட்டியளித்தார்.
அப்போது, “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை பா.ஜ.க. சந்திக்க தயாராக உள்ளது. நான் போட்டியிட வேண்டும் என்று தலைமை நினைத்தால் நிச்சயமாக போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரைகளில் இந்திய அளவிலுள்ள பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அடிமட்ட களத்தை தயார் செய்யும் பணிகள் முடிந்து, தற்போது பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். பிரதமர் மோடி வர உள்ளார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் சேலத்தில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளோம். பா.ஜ.க.வில் விருப்ப மனு வாங்குவதில்லை என முடிவு செய்து இருக்கிறோம். கடந்த தேர்தலில் விருப்ப மனு வாங்கவில்லை. அதுப்போல் இந்த முறையும் விருப்ப மனு வாங்குவதில்லை என முடிவு செய்து இருக்கிறோம்.
வேளாண் சட்டத்தை கொண்டு வந்ததது காங்கிரஸ் கட்சி தான். மக்கள் மத்தியில் போலியான நாடகத்தை காங்கிரஸ், திமுக நடத்தி வருகிறது. நீட் கொண்டு வந்துவிட்டு இப்போது வேண்டாம் என்று கூறுகின்றனர். ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அதை கொண்டு வந்தது பா.ஜ.க.
ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டது ஸ்டாலின். எல்லாம் செய்துவிட்டு இப்போது வேண்டாம் என்று போலியான நாடகத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள்” எனக் கூறினார்.