சின்னக் கலைவாணர் மற்றும் சமூக சேவகர் என்றழைக்கப்படும் நடிகர் விவேக் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நடிகர் விவேக் மறைவு நமக்கெல்லாம் மீளா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கலைஞராக மட்டுமின்றி திரையுலகத்திற்கு வெளியே வந்து மக்களுக்கான மனிதராக விளங்கினார்.
பசுமை புரட்சி, சுகாதாரம், லஞ்ச ஒழிப்பு என பல்வேறு துறைகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கெல்லாம் நல்வழி காட்டினார்.
சின்னக் கலைவாணர் விவேக்
சின்னக் கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்படும் விவேக், பல்வேறு விருதுகளை பெற்று மக்கள் இதயங்களில் இடம்பெற்றவர். இரண்டு தினங்களுக்கு முன்புகூட மக்களுக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுகிற வகையில் தடுப்பூசி போட வேண்டுமென்ற பரப்புரையையும் தொடங்கியிருந்தார்.
மாரடைப்பு நோய் அவரை நம்மிடமிருந்து மறைத்துவிட்டது. அவருடைய இடத்தை சமூகத்திலும் சரி, திரையுலகிலும் சரி ஈடு செய்வது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. அனைவரையும் சிரித்து சிந்திக்க வைக்க தெரிந்தவர். இன்று அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரை உலகிற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்லார்.