சென்னை: தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் ட்விட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
அதனடிப்படையில், அக்டோபர் 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். பிணை கோரி ஜார்ஜ் டவுன் மூன்றாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து புகார்தாரர் கோபிநாத் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி தாவூத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்யாணராமன் உள்நோக்கத்தோடு மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும், மத ரீதியாகவும், மத நம்பிக்கை தொடர்பாகவும் பேசக் கூடாதென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை அவர் தொடர்ந்து மீறி வருவதாகவும் புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, அவருக்கு பிணை வழங்குவது சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் புகார்தாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து கல்யாணராமனின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: காதலியின் கணவன் தலையை வெட்டி வீசிய இளைஞர் - ஒருதலைக் காதலால் கொடூரம்