வேல் யாத்திரை இன்று தொடங்கி டிசம்பர் ஆறாம் தேதி வரை நடைபெறும் என தமிழக பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், பாஜகவின் இந்த யாத்திரை மதக்கலவரத்தை தூண்டுவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட இருப்பதாகவும், எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நேற்று பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், பாஜக திட்டமிட்டுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால், துள்ளி வரும் வேல் என பாஜக தலைவர் முருகன் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்குவதற்காக சென்னையிலிருந்து திருத்தணி செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த முருகன், ” என் கடவுள் முருகனை வழிபட நான் செல்கிறேன். எனக்கு முருகனை வழிபடுவதற்கு அரசியல் சாசனப்படி உரிமை உள்ளது. அதனால் நான் தற்போது திருத்தணிக்கு செல்ல உள்ளேன் ” என்றார்.
தொடர்ந்து பேசிய பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா, ” இந்துக்கள் மனதை புண்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், இந்துப் பெண்களை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றவர்கள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதற்கும், தெய்வீக தமிழகத்தை உருவாக்குவதற்கும் இந்த வேல் யாத்திரை நடத்தப்பட உள்ளது. அனுமதித்தால் யாத்திரை, இல்லையேல் போராட்டம் “ எனத் தெரிவித்தார். வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லாததால் பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் போகும் வழியிலேயே கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முருகன் கையில் இருக்கும் வேல், பாஜக கைக்கு சென்றால்...