சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய வெளியுறவு சேவைத்துறையின் அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களுக்கு சுகாதாரத்துறையின் திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் விளக்கினர்.
அதனைத் தொடர்ந்து கருத்தடை வலையத்தை பெண்களுக்கு அதிகளவில் பொருத்தியதற்காக தேசிய அளவில் வழங்கப்பட்ட விருதை காண்பித்து, குடும்ப நலத்துறை மருத்துவர்கள் வாழ்த்து பெற்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, டெல்லியில் 27.7.2022 நடைபெற்ற தேசிய மாநாட்டில் கருத்தடை வலையம் தமிழ்நாட்டில் மிக சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளதற்காக தேசிய அளவில் முதல் இடம் பிடித்தற்கான விருது பெறப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகளவில் கருத்தடை வலையங்களை குடும்ப நலத்துறை பொறுத்தி உள்ளது.
ஈரோடு, சேலம் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற கருமுட்டை விவகாரம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதில் தொடர்புடைய மருத்துவமனைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் சுகாதாரத்துறை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கருத்தரிப்பு மையங்களுக்கான விதிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் விதிமுறைக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால் யாராக இருந்தாலும் சட்டப்படிப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கோடியே 51 லட்சம் பேருக்கு போட வேண்டியது இருக்கிறது. வரும் 7 ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 34 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படும். மேலும், இதுவரையும் தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அறிகுறி இருந்தால் அவர்களது ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் பரிசோதித்து முடிவு வழங்கப்படும்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் முறையாக வருகை பதிவேட்டை கையால்கிறார்களா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பணி வருகை பதிவேட்டிற்கான பயோமெட்ரிக் முறை ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. கரோனா காரணமாக மருத்துவர்களுக்கு பயோ மெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டது. முறைகேடுகளை தடுக்க மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மருத்துவர்கள் கூடுதல் நேரம் பணி புரிந்தால் அது வருந்தத்திற்கு உரியது. மருத்துவர்கள் மன உளைச்சலில் இருக்க கூடாது என்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எனக்கு தெரியாமலேயே என் வீட்டில் பணம் வைக்கப்பட்டுள்ளது" - கைதான நடிகை அர்பிதா முகர்ஜி பேட்டி!