சென்னை: தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு தான், மருத்துவமனை கட்டடத்தின் 4 தளங்களை அரசிடம் ஒப்படைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பில்ராத் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் எட்டு மாடிகள் கொண்ட பில்ராத் மருத்துவனையின் நான்கு முதல் எட்டு மாடிகள் விதிகளுக்கு அப்பாற்பட்டு கட்டப்பட்டது என்று கூறி, அதனை இடிக்க 2019ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்தத் தீர்ப்புக்கு தடைவிதித்து தற்போது, அந்த மருத்துவனையின் முதல் நான்கு மாடிகளை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசை பயன்படுத்திக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பில்ராத் மருத்துவமனையின் நிர்வாகத்திடம் கேட்டபோது, "பில்ராத் மருத்துவமனையில் 4 மாடிகள் இடிப்பதற்கு தடைவிதித்து, அரசு அந்த மாடிகளை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அந்த தீர்ப்பின் நகலினை பார்த்த பின்னர் தான், மருத்துவமனையின் நிர்வாகத்தின் சார்பில் தகவல்களை பகிர முடியும்.
மேலும், பில்ராத் மருத்துவமனையில் ஏற்கனவே அரசின் விதிமுறைகளை பின்பற்றி கரோனா வைரஸ் தாெற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறும்போது, "பில்ரோத் மருத்துவமனை குறித்த தீர்ப்பு தங்களுக்கு இன்னும் வரவில்லை எனவும், தீர்ப்பு வந்தப் பின்னர் தான் முழுமையான தகவல் அளிக்க முடியும் எனக் கூறினார்.