சென்னை ராயபுரம் ஏ.ஜே.காலனியைச் சேர்ந்தவர் அன்பரசு. இவர் சென்னை துறைமுகத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 1ஆம் தேதி அன்பரசு தனது இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார். அன்பரசு காலை விழித்துப் பார்த்தபோது வாசலில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தைக் காணவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அன்பரசு காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், காசிமேடு சூரியன் நாராயணன் தெருவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் புழல் சிறையில் தனது நண்பனைப் பார்த்துவிட்டு, இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வந்து சாவி இல்லாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது புழல் சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கிறிஸ்டோபரின் நடத்தையில் சந்தேகமடைய அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கிறிஸ்டோபர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளதும், கிறிஸ்டோபர் புழல் சிறையில் இருந்தபோது, எண்ணூர் ஜெப குமார் என்பவர் இரட்டைக் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது கிறிஸ்டோபருக்கும், ஜெப குமாருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
மேலும், தற்போது ஜெப குமார் சிறையிலிருந்து வெளியே வந்து, வழக்குக்காக திருவள்ளூர் நீதிமன்றத்துக்கு ரயிலில் சென்று வந்துள்ளார். இதனையறிந்த கிறிஸ்டோபர் காசிமேட்டில் இருசக்கர வாகனத்தைத் திருடி ஜெபகுமாருக்கு உதவியுள்ளார்.
இதனையடுத்து, காசிமேடு காவல் துறையினர் கிறிஸ்டோபர் திருடிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.