சென்னை: கடற்படை சார்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிவரும் இருச்சக்கர வாகனப் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.
கடற்படை தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்திய கடற்படை ரியர் அட்மிரல் புனித் சந்தா, சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் வீரர்களுக்கு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பல்வேறு கடற்படை குழுக்களைச் சேர்ந்தவர்கள், சென்னையிலிருந்து - கன்னியாகுமரி வரை செல்லும் இருச்சக்கர வாகனப் பேரணியை புனித் சந்தா தொடங்கிவைத்தார்.
பத்து நபர்களைக் கொண்ட 5 குழுக்கள் சென்னையில் தொடங்கி நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை பகுதிகள் வழியாகச் சென்று கன்னியாகுமரியை சென்றடைகிறார்கள்.
ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த இருச்சக்கர வாகன சுற்றுப் பயணம், டிசம்பர் 9 ஆம் தேதி நிறைவடைகிறது. அன்றைய தினம் குழு உறுப்பினர்கள் மீண்டும் சென்னை திரும்புவர்.
இந்திய கடற்படையின் பலத்தை பறைசாற்றும் வகையிலும், தற்கால இளைஞர்களை கடற்படையில் சேர ஊக்குவிக்கும் வகையிலும் இந்த பேரணி நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுகன்யா கப்பல் சென்னை மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கம் அருகே நங்கூரமிட்டு, அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.