உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரத்தை அழகுப்படுத்துவது தொடர்பாக, நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய தமிழக சுற்றுலாத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
மேலும், அக்குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி வினித் கோத்தாரி அமர்வில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாமல்லபுரம் போன்று 16 சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 5,109 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாமல்லபுரத்திற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு சார்பில் உரிய பதில் அளிக்காததால் மாமல்லபுரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றும், இல்லை என்றால் தொடர்புடைய துறைச்செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று எச்சரித்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 4 ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ஆணையர் தகவல்