ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் பயிற்சி கல்லூரியில் 6 மாத பயிற்சி முடிந்த, 767 காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி, இரண்டாம் அணி கவாத்து மைதானத்தில் நடைபெற்றது. அந்த வகையில் ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை-2 அணியில் மட்டும் 360 பேர் பயிற்சி நிறைவு பெற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பங்கேற்று, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், பயிற்சியில் சிறந்து விளங்கிய காவலர்கள் மற்றும் பயிற்சி கொடுத்த காவலர்களுக்கு பரிசுகளை அவர் வழங்கினார்.
அதேபோல் வீராபுரம் ரெஜிமெண்டல் படை பயிற்சி மையங்களில் பயிற்சி நிறைவு பெற்ற 206 புதிய காவலர்கள் அணிவகுப்பு விழாவில், மஞ்சுநாதா ஐபிஎஸ், ஜாபர் சேட் ஆகியோர் கலந்து கொண்டு காவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
அப்போது புதிய ஆயுதப்படை காவலர்கள் இடையே பேசிய ஏ.டி.ஜி.பி சங்கர் ஜிவால், “ தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பயிற்சி பெற்ற நீங்கள், இன்னும் ஒரு மாத காலம் காவல் நிலையங்களில் நேரடி பயிற்சி பெற இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த காவல் பணி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு குடும்பமும் முக்கியம்.
ஒரு ஆயுதப்படை காவலருக்கு 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை அரசு ஊதியம் வழங்குகிறது. இதனை சரியாக நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவற்றில் செலவழித்து பணத்தை இழக்கக்கூடாது. நிதி நிர்வாகம் குறித்து அறிவுரை வழங்க காவலர்களுக்கு தனியார் வங்கி வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று கூறினார்.
இதையும் படிங்க: பழுதடைந்துள்ள வானிலை ஆய்வு ரேடாரை சீரமைக்க பிரதமருக்கு கடிதம்