சென்னையில் வங்கிகளில் வாகன கடன் வாங்கி மோசடி செய்த, நீலாங்கரையைச் சேர்ந்த முகமது முசாமில்(34), அய்யாதுரை (32), பிரபல கார் பந்தய வீரர் பால விஜய் (35) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வங்கி ஊழியர், கார் டீலர் இருவரது உடந்தையுடன் பால விஜய் பல சொகுசு கார்களுக்கு லோன் வாங்கி மோசடி செய்தது உறுதியானது.
சொகுசு கார் வாங்கும் அளவிற்கு வசதியானவர்கள் என காட்ட, சினிமா பாணியில் பங்களாக்களையும், கார்களையும் வாடகைக்கு எடுத்து வங்கிகளை நம்ப வைத்து மோசடி செய்துள்ளனர். இந்நிலையில், மற்ற இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்ததில், கொடுங்கையூரை சேர்ந்த ரவி(50), சங்கரப்பாண்டியன் ஆகியோர் இதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சென்னயில் உள்ள கார்ப்பரேசன் வங்கி கிளையில் 2013ஆம் ஆண்டு முதல் மேலாளராக பணியாற்றிய வெங்கட்ராமன் என்பவர் கைதான முசாமிலுக்கு முறையான ஆவணங்கள் இன்றி இரண்டு சொகுசு கார்களை வாங்குவதற்கு ஒன்றரை கடன் கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்தது.
தற்போது திருச்சியில் உள்ள வங்கியின் மண்டல அலுவகத்தில் பணியாற்றி வரும் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் பிரபல வார இதழில் முக்கிய பொறுப்பு வகிப்பவரின் மருமகன் ஆவார். இந்த மோசடிக்கு முக்கிய உடந்தையாக இருந்த வங்கி ஊழியர் , கார் டீலர்கள் ஆகியோர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.