சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரை சாலையில், சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் பெருநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி மற்றும் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சாலை விதிகளை கடைபிடிக்கவும், சாலை விபத்துகளை தவிர்க்கவும் வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், ”போக்குவரத்து காவலர்கள் இன்றி சாலை விதிகளை மக்கள் பின்பற்றும் நாள் எப்போது வருகிறதோ அன்றுதான் சென்னையை சிறந்த மாநகரமாக மாற்ற இயலும். கடந்த 5 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது. வாகன ஓட்டிகள் முறையற்று நிற்பதை தவிர்த்து ஒரே கோட்டில் நிற்கப் பழக வேண்டும்” என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், “அண்ணா நகரில் உள்ளது போல் தானியங்கி கேமராக்களை மாநகரம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் பேரணிகள், போராட்டங்கள் நடத்த முன் அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி போராட்டங்கள், பேரணிகள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று முதலமைச்சர் அறிவித்துள்ளதால், அது குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, என்.எஸ்.எஸ் பிராந்திய இயக்குநர் சாமுவேல் செல்லையா, போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் லட்சுமி, துணை ஆணையர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சென்னையில் வரும் 8 ஆம் தேதி பேரணி நடத்த அனுமதி கேட்டு அமமுக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார். ஆனால், பேரணியில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்ற விபரம் தெரிவிக்கப்படாததால், மனுவை காவல் ஆணையர் நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: சசிகலா வரவேற்று பேரணி : முன்னாள் அமைச்சரின் மனு நிராகரிப்பு!