சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவுக்கு எழுதிய மூன்று கடிதத்தை இன்று (ஏப்.21) அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து அவரிடம் பேசினர்.
முதலாம் கடிதம்
கடிதத்தில், "வருகிற மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பாணை மூலம் தெரிவிக்கப்பட்டு அதற்கான தயாரிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இந்த சூழ்நிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களும் அனைத்துக் கட்சி கூட்டத்தினைக் கூட்டி வாக்கு என்னும் மேஜைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆலோசனையை தெரிவித்ததாக நாங்கள் அறிகிறோம். கரோனா தடுப்பு நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது.
மாநில அளவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை கூட்டி அவர்களுடைய கருத்தின் அடிப்படையில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதும், அதே நேரத்தில் வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக குறித்த காலத்திற்குள் நடத்தி முடிப்பதற்குமான முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக மாவட்டங்களுக்கு நேரடியாக தேர்தல் ஆணையம் தாக்கீது செய்திருப்பது சரியல்ல என்று கருதுகிறோம்.
ஏற்கனவே வாக்குச் சாவடி முகவர்கள் கரோனா சோதனை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ள நிலையில் அதற்கு மேல் தொற்று பரவாமல் இருப்பதற்கு வாக்கு எண்ணிக்கை மேஜைகளை சுருக்குவது பொருத்தமற்றதாகும் என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மேலும் இவ்வாறு மேஜை எண்ணிக்கையை சுருக்குவது வாக்கு எண்ணிக்கை எண்ணுவதற்கு பல மணி நேரம் நீடிப்பதற்கே வழிவகை செய்யும். சில தொகுதிகளில் இரண்டு நாட்கள் வரை நீட்டிக்கும் என தெரியவருகிறது. இவ்வாறு அதிகமான நேரம் ஒரே அறையில் அதிகமானவர்கள் இருப்பது தான் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். மேலும் வாக்கு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு பலவிதமான முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகள் ஏற்படும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
கட்டுப்பாடுகள் 30.4.2021 வரை அறிவிக்கப்பட்டிருக்கிற சூழலில் குறித்த நேரத்திற்குள் ஏற்கனவே திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கையை நடத்திட, மேஜை எண்ணிக்கைகளை குறைக்காமல் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிப்பது நல்லது என்பதை நாங்கள் கருதுகிறோம். மேலும் இது சம்பந்தமாக மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி தலைவர்களது கூட்டத்தை நடத்தி முடிவுகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் கடிதம்
மற்றொரு கடிதத்தில்,"உழைப்பாளர் தினமான மே தினம் ஒவ்வொரு ஆண்டும் பாடுபடும் தொழிலாளர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் நாளாகும். மாநில அரசாங்கமும் மே 1ஆம் தேதி விடுமுறை அறிவித்து இந்த கொண்டாட்டங்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. மே தின கொண்டாட்டங்கள் மே மாதம் முழுவதும் பரவலாக தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கூட்டம் கூடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவை சம்பந்தமான கட்டுப்பாடுகள் இருந்த போதும் கொடியேற்று நிகழ்ச்சியை மே 1ஆம் தேதி நடத்துவதற்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோருகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கடிதம்
கடந்த மார்ச் 31ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சிபிஎம் கட்சியால் அளிக்கப்பட்ட கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், அதை மாநிலத் தலைமை தேர்தல் அலுவலரின் பார்வைக்கு சிபிஎம் நிர்வாகிகள் சமர்பித்தனர். அந்த கடிதத்தோடு இன்றைய தேதியிட்ட மற்றொரு கடித்தத்தில்," தூத்துக்குடி மாவட்டம் ஏ குருப் பாசன நிலங்களுக்கு அட்வான்ஸ் கார் பருவத்திற்கான பாசன தண்ணீர் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திறந்த விடப்பட வேண்டும். இது சம்பந்தமாக தூத்துக்குடி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இக்கடிதத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தங்களுக்கு (மாநில தலைமை தேர்தல் அலுவலர்) அனுப்பியுள்ளதாக தகவல் தெரிகிறது.
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி இதுவரை எந்த முடிவுகளும் மேற்கொள்ளவில்லை. சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது தாதமதமானால் ஒருபோக விளைச்சலையே விவசாயிகள் இழக்க நேரிடும்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையை கருத்தில் கொண்டு தாங்கள் உடனடியாக தலையிட்டு அட்வான்ஸ் கார் தண்ணீர் திறந்து விடுவதற்கு உரிய நடவடிக்கைககள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்." என்றும் கூறப்பட்டுள்ளது.