டெல்லி: 2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் குறித்த அறிவிப்புகள் இன்று (ஆக.24) அறிவிக்கப்பட்டன.
அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்டப் பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கான நாவல், சிறுகதை, அபுனைவு (புனைவில்லாத), புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கார் விருது "மல்லிகாவின் வீடு" நூலுக்காக ஜி. மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி, பத்திரிகைத்துறையில் 27 ஆண்டுகள் கால அனுபவம் கொண்டர். இவர் பேசும் ஓவியம், நீ உன்னை அறிந்தால், பரிசலில் ஒரு படகு, மல்லிகாவின் வீடு உள்ளிட்ட சிறுவர்களுக்கான சிறுகதை நூல்களை எழுதியுள்ளார். பிரபலமானவர்களின் வெற்றி ரகசியம் என்ற நேர்காணல் நூல், மனமே மலர்ச்சி கொள் என்ற தன்னம்பிக்கை நூல் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.

"தனித்திருக்கும் அரளிகளின் மதியம்" என்ற கவிதை நூலுக்காக எழுத்தாளர் காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருது பெறுகிறார். இந்த விருது வழங்கும் விழா கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், நடப்பாண்டில் வரும் நவ.14ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜி.மீனாட்சி, ப.காளிமுத்துவிற்குத் தலா 50,000 ரூபாய் ரொக்கமும், விருதும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசும் மாநில அரசும் எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக பல்வேறு விருதுகளை வழங்கி எழுத்தாளர்களுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் சிறப்பு செய்து வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி.மீனாட்சி, எழுத்தாளர் ப.காளிமுத்து ஆகியோர் நடப்பு 2022-க்கான சாகித்ய அகாதமி வழங்கும் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது