சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் 6ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அப்புன்ராஜ் (42). இவருக்கும் இவரது மனைவி தேவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேவி பிரிந்து தனியாக வாழ்ந்துவருகின்றார்.
இதனையடுத்து, அப்புன்ராஜ், சரண்யா, சந்தியா ஆகிய இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டில் வாழ்ந்துவந்தனர்.
நேற்று முன்தினம் (செப். 27) மாலை இரண்டு மனைவிகளும் கணவர் அப்புன்ராஜுவுடன் சண்டையிட்டு அவர்களது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று (செப். 28) மாலை தனது பெரியப்பா வீட்டிற்குச் சென்ற அப்புன்ராஜ் தனது மனைவி பிரிந்து சென்றதற்கு தாங்கள்தான் காரணம் என பெரியப்பா வேலுச்சாமி (82), அவரது மகன் ரவீஸ்வரன் (54) ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் மது அருந்த பணம் கேட்டு, அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து வேலுச்சாமி, ரவீஸ்வரர் ஆகிய இருவரையும் தாக்க முயன்றார்.
அப்போது, வேலுச்சாமி, ரவீஸ்வரர் இருவரும் கிரிக்கெட் மட்டையை பிடுங்கி அப்புன்ராஜை தாக்கியுள்ளனர். அதில், பலத்த காயமடைந்த அப்புன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அப்புன்ராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமி, அவரது மகன் ரவீஸ்வரன் ஆகிய இருவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.