சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம் வேடப்பட்டி சக்தி நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி - வினய கஸ்தூரி தம்பதியின் மூத்த மகன் யத்தீந்திரா (12). யத்தீந்திரா ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதை இரண்டாவது வயதில் அறிந்த பெற்றோர், அவருக்கு யோகா, கராத்தே, நீச்சல் பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வந்துள்ளனர். மேலும் இமயமலை பகுதிகளில் வழக்கமாக டிரெக்கிங் செல்லும் குடும்ப நண்பரான ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் தனியாக மலையேற்றப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடர்களில் ஒன்றான 28,000 அடி உயரம் கொண்ட பியாஸ் குண்ட் மலையில் ஆண்ட்ரூ ஜோன்ஸுடன் ஏறத் தொடங்கிய சிறுவன் யத்தீந்திரா, 4 நாள்களில் சுமார் 13 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அங்கு தேசியக் கொடியை அசைத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இமயமலைத்தொடர்களில் மலையேற்றப்பயிற்சி மேற்கொண்டு சுமார் 13 ஆயிரம் அடி உயரத்தை எட்டிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன் என்ற சாதனையை யத்தீந்திரா நிகழ்த்தியுள்ளர்.
இதையடுத்து சிறுவன் யத்தீந்திரா டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய யத்தீந்திராவின் தாய் விஜய கஸ்தூரி, "யத்தீந்திரா சிறு வயதிலிருந்தே மூளை வளர்ச்சி பாதிப்படைந்தவர். ஆனாலும் சிறுவயதிலேயே நீச்சல் பயிற்சி, கராத்தே உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்து வந்தோம். மேலும் யத்தீந்திரா மலை ஏறுவதற்கான பயிற்சிகளை எடுத்து வந்தார். பெற்றோர்களாக தங்களால் முடிந்த அனைத்து ஒத்துழைப்பும் எங்கள் மகனுக்கு கொடுத்து வந்தோம்.
தற்போது யத்தீந்திரா உத்தரகாண்ட் மாநிலத்தில் இமய மலைத்தொடரில் 13 ஆயிரம் அடி உயரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் முதல் சிறுவனாக 13 ஆயிரம் அடி உயரத்தில் ஏறி சாதனை படைத்தது இந்தியாவிற்கு பெருமை. இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளோம். குறைபாடு உள்ளவர்களை வெளி உலகத்திற்கு கொண்டுவர அரசு உதவி செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் இமயமலையில் ஏறி சாதனை