சென்னை: சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு செய்தியாளரிடம் பேசுகையில், 'தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 16ஆவது சட்டப்பேரவை நடவடிக்கை குறிப்புகள், சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவப்படத் திறப்பு விழாவின் சிறப்பு வெளியீடு ஆகியவற்றை பொது மக்களின் பார்வைக்கு சட்டப்பேரவையின் இணையதளத்தில் (www.assembly.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் கடிதம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பேசிய அவர்,
'சட்டப்பேரவை வேறு, நீதிமன்றம் வேறு, சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தைப்பயன்படுத்தி நடவடிக்கை எடுப்போம். ஜனநாயக முறைப்படி நியாயமாக நடப்போம். சட்டப்பேரவை உரிமை எந்த காலதாமதம் இல்லாமலும், விருப்பு வெறுப்பு இல்லாமலும் நூறு விழுக்காடு ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக தற்போது நான்கு பிரிவுகளாக உள்ளது. அதற்கு திமுக அரசு காரணம் இல்லை. அவர்களுடைய உட்கட்சி பிரச்னை, அவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் சென்றுள்ளனர். இதில் என்ன முடிவு வருமோ அது ஒரு பக்கம், சட்டப்பேரவையினைப் பொறுத்தவரை ஜனநாயக மாண்புப்படி இது நடைபெறும். இது ஒன்றும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்னை இல்லை. இது ஒரு கட்சியின் பிரச்னை.
நாங்கள் யாருக்காகவும் காத்திருக்கமாட்டோம். சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தைப்பயன்படுத்தி நேர்மையாக நியாயமாக நடவடிக்கை எடுப்போம்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனியார் தங்கும் விடுதியில் ராணுவ வீரர் தற்கொலை